கீரை ஸ்மூத்தி – ஷங்கர் ஜி

கீரை ஸ்மூத்தி (ஒருவருக்கானது)

பேலியோவில் பாதாமைப் போலவே கீரையையும் தனியாகச் சாப்பிட்டால் அதன் பூரண சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கும் என்பது பேலியோவை நம்புபவர்களுக்குத் தெரியும்.

கீரை ஸ்மூத்திகீரையை பொரியலாகவோ, மசியலாகவோ செய்து சாப்பிடுவது என்பது கொஞ்சம் போரடிக்கக் கூடிய விஷயம் என்பதால் வேறொரு வீகன் டிடாக்ஸ் பதிவில் பார்த்த இந்த ஸ்மூத்தியை இரண்டு நாட்களாக முயற்சித்துப் பார்த்தேன், நன்றாக சுவையாக இருக்கிறது. பயன்படுத்தும் பொருட்களும் பேலியோதான் என்பதால் விருப்பமுள்ளவர்கள் முயற்சிக்கலாம்.

அரை கட்டு கீரை ( சிறுகீரை, அரைகீரை, முளைக்கீரை, பசலை, பாலக், சிகப்பு தண்டுக் கீரை) இவற்றில் ஏதேனும் ஒன்று ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். கீரையைப் பச்சையாகப் போட்டுத்தான் ஸ்மூத்தி செய்யச் சொல்கிறார்கள். ஆனால் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு இதில் சிறிய மாற்றமாக கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து ஒரு வடிகட்டியில் போட்டு அதை குளிர்ந்த நீரில் அலசிவிடுங்கள். இது பாதுகாப்பானது மற்றும் பச்சை வாடையைக் குறைக்கக் கூடியது.

ஒரு வெள்ளரிக்காய்.
ஒரு தக்காளி.
அரை அங்குல அளவுள்ள இஞ்சி.
இரண்டு பற்கள் பூண்டு.
ஒரு கைப்பிடி புதினா இலை.
ஒரு சிறிய கட்டு கொத்துமல்லி
இரண்டு எலுமிச்சை பழங்களின் சாறு.
உப்பு (தேவைப்பட்டால்) ஒரு சிட்டிகை.
இதை அனைத்தையும் ஒரு ப்ளென்டரில் / ஜூஸரில் போட்டு அரைக்க வேண்டும். திக்காக வரும் இந்த க்ரீன் ஸ்மூத்தியை அப்படியே குடிக்கவேண்டியதுதான்.

இதுதான் சாலஞ்சிங்கான காலை உணவு. நிறம், மணத்தை கொஞ்சம் ஒதுக்கிவைத்துப் பார்த்தால், சுவை ஒன்றும் அவ்வளவு மோசமில்லை, இஞ்சி, பூண்டு, புதினா போன்றவைகள் நல்ல வித்தியாசமான சுவையை அளிக்கும். நல்ல தெம்பையும், பசி தாங்கும் வல்லமையும் அளிக்கவல்ல ஸ்மூத்தி இது. காலை வெறும் வயிற்றில் குடிக்கும்போது இதன் சத்துக்கள் முழுவதும் உடல் கிரகிக்கும்.

Follow us on Social Media