தளதள சில்லி மஷ்ரூம் – செந்தழல் ரவி

இன்றைக்கு கடையில் காளான் கொட்டி வைத்திருந்தார்கள். தளதளவென இருந்தவைகளை பொறுக்கி எடுத்து வாங்கிவந்தேன். சில்லி மஷ்ரூம் செய்யலாம் என்ற எண்ணம் வந்தது ! காரமாக, சுவையாக, அதே நேரம் நல்ல ஃபில்லிங் ஆக இருக்குமே என்பது இந்த முடிவுக்கு வர காரணம்.

உள்ளபடியே மிக அற்புதமான சுவையுடன் இருந்தது. நீங்களும் செய்து பார்த்து சுவைத்து மகிழவும்.

தேவையான பொருட்கள்
———————–

காளான் – சுத்தப்படுத்தியது (250 கிராம்)
ஒரு துண்டு இஞ்சி – பொடியாக நறுக்கியது
6 பல் பூண்டு – பொடியாக நறுக்கியது
5 பச்சை மிளகாய் – பொடியாக நறுக்கியது
1/2 பெரிய வெங்காயம் – பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – தேவையான அளவு
பேலியோ மசாலா – தேவையான அளவு
மிளகாய் ப்ளேக்ஸ் (சில்லி ப்ளேக்ஸ்) – தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செக்கில் ஆட்டிய நல்லெண்ணை – 1 குழிக்கரண்டி
கறிவேப்பிலை / கொத்தமல்லி – தேவையான அளவு
கடுகு / உளுந்து : ஒரு டீஸ்பூன் இரண்டும்

செய்முறை
———-

காளான் சுத்தப்படுத்திய பிறகு டிஷ்யூ பேப்பரில் நன்றாக துடைத்து தண்ணீர் இல்லாமல் எடுத்து வைக்கவும்.

வாணல் வைத்து, செக்கில் ஆட்டிய நல்லெண்ணை விட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதன் பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய அரை வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இப்போது அரை சிட்டிகை உப்பு போட்டால் வெங்காயம் நன்றாக வேகும்.

இப்போது மஞ்சள் தூள், சில்லி ஃப்ளேக்ஸ், பேலியோ மசாலா போட்டு, 2 நிமிடம் வதக்கவும். பேலியோ மசாலா இல்லை என்றால் மிளகாய் தூள் போட்டுக்கொள்ளலாம்.

இப்போது அரைவாசி / கால்வாசி ஆக நறுக்கிய காளானை போட்டு, 2 நிமிடம் வதக்கவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்துவிடவும்.

வாணலை / தோசைக்கல்லை முடி இரண்டு நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.

இப்போது மூடியை திறந்து 6 நிமிடம் நல்ல தீயில் வேகவைக்கவும். இந்த நேரம் அடிக்கடி பிரட்டிவிட்டுக்கொண்டு இருக்கவும் !!

சுவையான தளதள சில்லி மஷ்ரூம் தயார். (சூடாக தட்டில் பரிமாறி யாரும் பிடிங்கி சாப்பிடும் முன் நீங்களே சாப்பிடவும்).

காளான் சுத்தப்படுத்த – 3 நிமிடம். காய்கறிகள் வெட்ட – 7 நிமிடம். உணவு தயாரிக்கும் நேரம் – 10 நிமிடம். 20 நிமிடத்தில் மிக சுவையான உணவு தயார் ! இனிமையாக சுவைத்து மகிழவும் !

 

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/835533157

Follow us on Social Media