பசுமஞ்சள் குடல்கறி வறுவல் – திருப்பூர் கணேஷ்

தேவையான பொருட்கள்:-

 1. ஆட்டுக்குடல் – 1/2 கிலோ + சுத்துக்கொழுப்பு 50 t0 100  கிராம்
 2. தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன்
 3. கடுகு – 1/4 ஸ்பூன்
 4. சின்ன வெங்காயம் – 12 எண்
 5. பச்சைமிளகாய் – 6 to 8
 6. பசு மஞ்சள் – 3 இஞ்ச்
 7. இஞ்சி – 3 இஞ்ச்
 8. பூண்டு – 10 பல் பெரியது
 9. கறிவேப்பிலை – 6 கொத்து
 10. கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
 11. மஞ்சள்தூள் – 7 ஸ்பூன் – (அட ஆமாங்க மஞ்சள் தான் இங்க மேஜிக் சுவை)
 12. உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை:-

முதலில் குடலை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 ஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி 1/2 மணி நேரம் ஊர வைக்கவும். அரை மணி நேரம் கழித்து 3-முறை நீரில் நன்றாக பிசைந்து கழுவிக்கொள்ளவும்.  அதன் பின் 3 ஸ்பூன் மஞ்சள்தூள் 1 ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி தனியாக வைக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், பசு மஞ்சள், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை இவை அனைத்தையும் தனித்தனியாக  பொடிப்பொடியாக (கண்டிப்பாக) நறுக்கி வைக்கவும். (இதில் பசு மஞ்சள், இஞ்சி, பூண்டு ஒரே அளவு சமமாக இருக்க வேண்டும் படத்தில் உள்ளபடி)

வாணலியில் தேங்காய் எண்ணெய் 4 டீஸ்பூன் விட்டு கடுகு போட்டு பொரிந்ததும், வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி  பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக சுண்டும் வரை வதக்கவும். இதன் பின் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து வதக்கவும். கடைசியாக பசு மஞ்சள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு குடல் சேர்த்து பிரட்டி விட்டு 2 டம்ளர் நீர் விட்டு மூடி போட்டு வேகவிடவும். ஒரு கொதி வந்ததும் மஞ்சள்தூள் 2 ஸ்பூன் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்க்கவும் (ஏற்கனவே 1 ஸ்பூன் உப்பு குடலில் உள்ளது). பின் 15 நிமிடம் கழித்து கலக்கி விட்டு 1/2 டம்ளர் நீர் சேர்க்கவும், இதே போல நீர் வற்ற வற்ற குடல் வேகும் வரை 15 நிமிடத்திற்க்கு ஒருமுறை 1/2 டம்ளர் நீர் விட்டு மிதமான சூட்டில் வேகவைக்கவும் (ஒரு மணி நேரம் ஆகும்). அதுவரை ஒரு சாங் போகலாம்…. 🙂

மஞ்சள் நிறமே… மஞ்சள் நிறமே…. குடலின் நிறமும் மஞ்சள் நிறமே… மஞ்சள் நிறமே… மஞ்சள் நிறமே…. பேலியோவுக்கு பிடித்த நிறமே… 🙂

குடல் நன்றாக வெந்தபின் மூடியை எடுத்துவிட்டு அடுப்ப சிம்ல வச்சு 10 நிமிடம் அடி பிடிக்காமல் நீர் சுண்டும் வரை ஓட்டி விடவும். இப்போ கொழுப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், பசு மஞ்சள், இஞ்சி, பூண்டு எல்லாம் கரைந்து குடல்கறில சேந்து செமி கிரேவி பதத்தில் வரும் பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கிடுங்க. அப்புறம் என்ன…….

அப்படியே சுடச்சுட சாப்பிட்டா… தேவாமிர்தம் தான்… மஞ்சள் & பசு மஞ்சள் டேஸ்ட்ல… ஹையோ ஹையையோ… கணேஷ் அரைகிலோ ஒரு ஆளுக்கு பத்தாது போல… 🙂

 

பி.கு

1. பசு மஞ்சள் இல்லைனா கவலை வேண்டாம் மஞ்சள் தூள் இருந்தாலே போதும் (டேஸ்ட் எதுவும் மாறாது).

2. இந்த சமையல் முறையில் குடல் வாசம் சுத்தமா இருக்காது.

3. ரத்தம் சேர்க்க வேண்டும் என்றால் 50 கிராம் கரைத்து கடைசி 10 நிமிடத்திற்க்கு முன்பு ஊற்றி விடவும்.

4. குடல்கறிக்கு சுத்துக்கொழுப்பு ரொம்ப முக்கியம் பாத்துக்கோங்க.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media