பனீர் மிண்ட் மரிஜ்வானா – பா ராகவன்

இன்று ஓர் அதிஉன்னத தினம்.

முற்றிலும் என் சொந்தக் கற்பனையில் ஒரு புதிய உணவை சிருஷ்டி செய்து சமைத்து, சாப்பிட்டும் பார்த்துவிட்டேன். கற்பனைக்கெட்டாத அற்புதச் சுவை படைத்த இந்த அரிய கண்டுபிடிப்பை சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இதன் பெயர் பனீர் மிண்ட் மரிஜ்வானா.

பனீர்தான் பிரதானம் என்றாலும் இந்தப் புதிய உணவானது புதினாவால் மட்டுமே புனிதப்படுத்தப்படுகிறது. எனவே நமக்குத் தேவை இரண்டு பிடி புதினா இலைகள். அதற்குத் துணையாக ஒரு பிடி கொத்துமல்லி. இதனோடு இரண்டு தக்காளிப் பழங்கள் மற்றும் ஒரு இஞ்ச் இஞ்சி, எட்டு கருவேப்பிலை, ஒரு பச்சை மிளகாய், அரை மூடி எலுமிச்சை, இருபத்தி ஐந்து கிராம் அமுல் சீஸ்.

முதலில் இந்தப் புதினா கொத்துமல்லி தக்காளி இஞ்சி பச்சை மிளகாய் வகையறாக்களை நன்கு சுத்தம் செய்து நறுக்கி மிக்சியில் போட்டு சட்னிபோல் அரைத்துக்கொள்ளவும். பாதி அரைந்ததும் உப்புப் போட்டு அரை மூடி எலுமிச்சை சாறு பிழியவும். மீண்டும் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

1பிறகு அடுப்பிலேற்றிய வாணலியில் ஐம்பது கிராம் வெண்ணெய் அல்லது இரண்டரை ஸ்பூன் நெய்விட்டு சூடு படுத்தவும். தேவைப்பட்டால் நாலு கடுகு. அது வெடித்தபின் நறுக்கிய பனீரைப் போட்டுக் கிளறி, கொஞ்சம் வேகவிடவும்.

பனீர் பாதி வெந்ததும் சும்மா இரண்டு சிட்டிகை உப்பு தூவி ஒரு கிளறு கிளறவும். அதன்பின் தயாராக உள்ள புதினா தக்காளி ஜூஸை இதன் தலையில் கொட்டி கிளறிக்கொண்டே இருக்கவும்.

கவனம். அடுப்பு எப்போதும் சிம்மிலேயே இருக்கவேண்டும். இந்த புதினா தக்காளிக் கரைசல் முதலில் தளதளவென்று கொதிக்கத் தொடங்கும். ஆனால் கொதி அடங்கி, அது பனீரோடு இரண்டறக் கலந்து பனீரின் கலரே பச்சையாக மாறும் வரை விடாதீர்கள்.

வாணலியில் புதினாக்கரைசல் ஒரு சொட்டு கூட தனியே தெரியக்கூடாது. கிட்டத்தட ஃப்ரை. கிளறிக்கொண்டே இருங்கள். பனீர் முழுப்பச்சை ஆனதும் அடுப்பை அணைத்துவிடலாம்.

2

இதுவரை வெளியே எடுத்து வைத்துள்ள சீஸ் கட்டியானது இளகி, ஃப்ரிட்ஜ் இல்லாத செட்டியார் கடை ஊத்துக்குளி வெண்ணெய் பதத்துக்கு வந்திருக்கும். இதை மேற்படி சரக்கின்மீது வழித்துப்போட்டு ஒரே ஒரு கிளறு.

முடிந்தது கதை.

நவராத்திரி ஒன்பது தினங்களும் நான் வெங்காயம் பூண்டு தொடமாட்டேன். எப்படி அது இல்லாமல் எப்படி இந்தப் பனீரை ருசியோடு உண்பது என்று படு தீவிரமாக யோசித்ததில் இம்மாதிரி நாலைந்து யோசனைகள் வந்தன. முதல் பரிட்சார்த்த முயற்சி இன்று நடந்தேறியது.

உண்மையிலேயே இது ருசியாக உள்ளது. நண்பர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

(இதில் வெங்காயம் பூண்டும் சேர்ந்தால் இன்னும் பிரமாதமாக இருக்கக்கூடும்.)  3

சமையல் குறிப்பு :

Follow us on Social Media