ஸ்ஸ்ப்ப்ப்பா உஸ் உஸ் மட்டன் குழம்பு – செந்தழல் ரவி

பெயர்க்காரணம் – தூக்கல் காரத்தில் செய்யப்பட்ட மட்டன் குழம்பை பில்டர் செய்து கறியை மட்டும் உண்டு, ஸ்ப்ப்ப்பா உஸ் உஸ் என்று வீட்டை சுற்றி ஓடிக்கொண்டிருந்தேன்.

தேவையான பொருட்கள்
————————

நல்ல போன்லஸ் மட்டன். ஹலால் மட்டன் எங்கள் ஊர் ஈரான் கடையில் கிடைத்தது. இந்த ரெசிப்பி 1 கிலோவுக்கு.
பட்டை/லவங்கம்
தேங்காய் எண்ணை – 8 பெரிய ஸ்பூன்
கடுகு – 2 (ஆமாம் ரெண்டு. ரெண்டு தாங்க)
இஞ்சி – 40 கிராம்
பூண்டு – 6 பல்
(இஞ்சி பூண்டை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்)
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பேலியோ மசாலா – 4 பெரிய ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 டீ ஸ்பூன்
மிளகாய் பொடி – 6 பெரிய ஸ்பூன் (தெறிக்கனும் காரம்)
உப்பு – தேவையான அளவு

14947935_10154686587093158_3330078816533653986_n

செய்முறை
———-

தேங்காய் எண்ணையை பாத்திரத்தில் விட்டு அது காய்ந்து விட்டதா என பார்க்க ஒரு கடுகை கும்ளே பவுலிங் மாதிரி போடவும். கடுகு வெடிக்கவில்லை என்றால் ரெண்டு நிமிடம் கழித்து இன்னொரு கடுகை அஸ்வின் பவுலிங் மாதிரி போடவும். இந்த முறை கடுகு வெடித்துவிடும். இப்போது லவங்கம், பட்டை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை போட்டு (கறிவேப்பிலை இலை இருந்தால் நாலு இலை போட்டு), வெங்காயம் போட்டு வதக்கவும். இப்போது அரை ஸ்பூன் உப்பு போட்டால் வெங்காயம் சீக்கிரமாக பொன்னிறத்தில் வறுபடும். இப்போது தக்காளி போட்டு வதக்கவும். அடுப்பின் தீயை குறைத்து மசாலா பொடிகளை போடவும். மஞ்சள் தூள் போடவும். இன்னும் கொஞ்சம் உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். மிளகாய் பொடியை போட்டு இன்னும் இரண்டு நிமிடம் வதக்கவும். நறுக்கிய மட்டன் பீஸ் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, இன்னும் 3 ஸ்பூன் உப்பு போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைக்கவும்.

மட்டன் வேகும்போது ஷாகீரா, பியோன்ஸே, ரிகானா, நடாலியா ரோஸ் போன்றவர்களின் இசையை ஓடவிட்டால் மட்டன் சுவை ரொம்ப நன்றாக இருக்கும். (அட முயற்சி பண்ணி பாருங்களேன்).

பத்து நிமிடம் கழித்து ஒரு மட்டன் பீஸ் எடுத்து சாப்பிட்டு பார்த்து நல்ல மிருதுவாக இருந்தால் அடுப்பை அணைத்து பாத்திரத்தில் இட்டு உண்ண தொடங்கலாம்.

சாப்பிட்டு முடிக்கும் வரை காரம் தெரியாது. சாப்பிட்ட பின் தான் ஸ்ப்ப்ப்பா உஸ் உஸ் என தண்ணீரை தேடி ஓடுவீர்கள். அதனால் தான் அப்படி பெயர் வைத்தேன்.

உணவை செய்தது என் தங்கமணி (அர்ச்சனா). நன்றி !

Follow us on Social Media