உணவு விழிப்புணர்வு – உண்ணாவிரதம் நல்லாதா ? | டாக்டர் ஃபரூக் அப்துள்ளா

உண்ணாவிரதம் என்பது மனித இனம் தோன்றிய காலம்தொட்டே இருந்திருக்கிறது.

வேட்டையாடி பிழைத்த காலத்தில் இருந்த மனிதர்கள்
(hunters and gatherers ) வேட்டையாடி குழுக்களாக சேர்ந்து வாழ்ந்தனர்.

வேட்டை சிக்கிய நாள் மட்டுமே உணவு உண்பார்கள். வேட்டை இல்லாத நாட்களில் பட்டினி தான்.
மரக்கொட்டைகள்(nuts), சில கிழங்குகள் தான் சில நாட்கள் கிடைக்கும். எஞ்சிய நேரம் முழுப்பட்டினி தான்.

இப்படித்தான் லட்சோப லட்சம் வருடங்கள் கழிந்தன.
ஒரு நாள் வயிறுமுட்ட உணவு என்றால்
மறுநாள் பட்டினி

ஒடிக்கொண்டேயிருந்த நாடோடி இனமான நாம்.
பனியுகம் (ice age) முடிந்த பின்னர்,
ஐஸ் மலைகள்(glaciers) உருக ஆரம்பித்து, உலகில் பல்வேறு ஆறுகள் தோன்றின.

அந்த ஆறுகளின் கரைகளில் மனித இனம் தங்க ஆரம்பித்தது.
ஏரி, குளம், குட்டை என நீரைத் தேக்கி, விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டான்.

தானியங்கள் விளைவித்தான்.
தானியங்களை உண்ண ஆரம்பித்தாலும் இன்று நாம் உண்பதைப் போன்று மூன்று வேளை உண்ணவில்லை.

மனித சமுதாயம் தோன்றி , கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு உணவுப் புரட்சி வரும் வரை நம் முன்னோர்கள் சாப்பிட்டது ஒரு வேலை உணவு தான். பல நாட்களில் அதுவும் இருக்காது.

மழையின்றி வறட்சியால் ஏற்பட்ட பஞ்சங்கள்.
தொடர்ச்சியான போர்களால் மனிதனால் உண்டாக்கப்பட்ட செயற்கைப் பஞ்சங்கள் என மனித சமுதாயம் தொடர்ச்சியாக பஞ்சங்களை பார்த்துவருகிறது.

ஆகவே உண்ணாவிரதம் என்பது நமது முன்னோர்களின் வாழ்வியலில் இரண்டறக்கலந்த ஒன்று.

உலகில் கடந்த பத்து நூற்றாண்டுகளில் தோன்றிய பல்வேறு சமயங்களும் உண்ணாநோன்பை வலியுறுத்துகின்றன.

இந்து சமயத்தில் ஏகாதசி, பிரதோஷம் போன்ற நாட்களிலும்
பிரதி திங்கள் அன்று சிவபக்தர்கள், பிரதி வியாழன் அன்று விஷ்ணு பக்தர்களும் விரதம் இருப்பர்.

கிறிஸ்தவ சமயத்தில் , சாம்பல் புதன்கிழமையைத் தொடர்ந்து வரும் நாற்பது நாட்களை “லென்ட் விரதம்” அனுஷ்டிக்கின்றனர்.

இஸ்லாமிய சமயத்தில் , ரமலான் மாதத்தின் முப்பது நாட்கள் விரதம் இருப்பது கட்டாய கடமையாகும்.

புத்த மதத்தில் “வினயா” என்ற பெயரில் விரதம் அனுஷ்டிக்கின்றனர். அதில் மதிய உணவோடு அதற்கு மேல் உண்ணமாட்டார்கள்.

ஜெய்னர்கள் சவ்விஹார் உபவாஸ் ( நீர்/ உணவு இரண்டையும் உண்பதில்லை) என்றும் திவிஹார் உபவாஸ் ( நீரை மட்டும் குடிப்பர்)என்றும் விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

ஏன் பட்டினியாய் இருப்பது இத்தனை போற்றுதலுக்குரியதாக இருந்திருக்கிறது???

நாம் உண்ணும் உணவு செரிமானமாக நமது உடல் நான்கில் இருந்து ஐந்து மணிநேரத்தை செலவழிக்கிறது.

உணவு உண்ட பின் குறைந்தபட்சம் 8-12 மணிநேரம் கழித்து உடல் சீரான நிலையை அடைகிறது.
முக்கியமான ஹார்மோன்கள் (தைராக்சின், இன்சுலின் முதலியன குறைந்தபட்ச அளவில் இருக்கின்றன.. இதை basal rate என்போம்)

நமது இயக்கங்கள் யாவும் சீராகிறது.

அடிக்கடி உணவு உண்டு கொண்டிருப்பதை விட இடையிடையே விரதம் இருப்பது நமது உடலை வலிமையாக்கவல்லது.

உண்ணாவிரதத்தின் நன்மையை அறிய நாம் நம் உடலின் இயங்குவியலை அறிய வேண்டும்

பொதுவாக மாவுச்சத்தை உண்ணும் ஒருவருக்கு அவரது தசைகள் (muscle) மற்றும் கல்லீரலில்(liver) மாவுச்சத்து க்ளைகோஜெனாக சேமிக்கப்படும். இப்படி 300 – 500 கிராம் க்ளைகோஜென் நமக்கு ஸ்டாக் இருக்கும்

அந்த அளவுக்கு மீறி உண்ணப்படும் மாவுச்சத்து நமது தோலுக்கு அடியிலும், வயிற்றிலும் தொப்பைக் கொழுப்பாக மாறி ஸ்டோர் செய்யப்படும்.

ஒருவர் உண்ணாவிரதம் இருக்கையில் அவரது க்ளைகோஜென் ஸ்டோரை முதலில் உடல் உபயோகிக்கும் .

பிறகு, தனது தேவைக்கு உடலின் கொழுப்பை எரிக்க ஆரம்பிக்கும். இதுவே lipolysisஎனப்படும்.

மூளைக்கு எப்போதும் க்ளூகோஸ் சென்று கொண்டே இருக்க வேண்டும்.
ஆகவே தேவையான க்ளூகோசை உடல் புரதச்சத்தையும், கொழுப்பையும் கரைத்து க்ளூகோசாக மாற்றும். இது
“க்ளூகோநியோஜெனசிஸ்” எனப்படும்(gluconeogenesisgluco- glucose ; neo- new ; genesis ; giving birth)

இதன் வழி நம் உடல் உள்ளுறுப்புகளில் மண்டிக்கிடக்கும் கொழுப்பான visceral fats கரைக்கப்படும்.
உள்ளுறுப்புகள் சிறப்பாக இயங்கும்

அமெரிக்க கேன்சர் இன்ஸ்டிட்யூட் கூறுகிறது “கேன்சருக்கு அளிக்கப்படும் கீமேதெரபியுடன் உண்ணாநோன்பையும் சேர்த்து இருப்பது நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. புற்று நோய் கட்டியின் அளவுகளைக் குறைக்கிறது ” என்று(Lee C, Longo VD (2011). “Fasting vs dietary restriction in cellular protection and cancer treatment: from model organisms to patients”. Oncogene (Review). 30 (30): 3305–16)

இயற்கையாகவே உண்ணாவிரதம் மூலம் நமது கெட்ட கொழுப்புகளான ட்ரைகிளசரைடுகள் குறைகின்றன.
நல்ல கொழுப்பு கூடுகிறது

உண்ணாவிரதம் மூலம் பல மூளை சம்பந்தப்பட்ட வலிப்பு நோய் பிரச்சனைகள் சரியாகின்றன .
மனத்தாழ்வு நிலை ( depression) இந்த விரதம் மூலம் சரியாகிறது என்கிறது ஒரு ஆய்வு( Fond G, Macgregor A, Leboyer M, Michalsen A (2013). “Fasting in mood disorders: neurobiology and effectiveness. A review of the literature”. Psychiatry Res (Review). 209 (3): 253–8.)

விரதம் இருப்பதால் brain neuro peptides எனும் ரசாயன அளவு அதிகமாகிறது. அதனால் மூளையின் ஆற்றல் அதிகமாகிறது. கவனம் சிதறாமல் இருக்கிறது.

இடையிடையே விரதம் (intermittent fasting) இருப்பது மிகச்சிறந்த நோய் நிவாரணியாகவும் நமது எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வெள்ளை அணுக்கள் தங்களைத் தாங்களே விரதத்தின் போது புணரமைத்துக்கொள்கின்றன.
பல பழைய செல்கள் இறந்து புதிய செல்கள் பிறக்கின்றன. இதற்குப் பெயர் “ஆட்டோஃபேஜி”.

ஜீரண மண்டலம் சம்பந்தப்பட்ட நோய்களான இரிட்டபிள் பவல் சின்ட்ரோம் (irritable bowel syndrome) விரதம் இருப்பதால் சீராகின்றன.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறை ஏற்படுத்தும் பாலி சிஸ்டிக் ஓவரி நோய் (PCOD) , மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியதாகும். அதற்கு காரணம் “இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்” தான்.
விரதத்தின் மூலம் இன்சுலின் நன்றாக வேலை செய்கிறது. PCOD சரியாகிறது.

இப்படிப்பட்ட சிறப்பு மிக்க உண்ணாநோன்பை நாம் அனைவரும் வாரம் ஒருமுறையேனும் கடைபிடித்தால் உடலுக்கு மிகவும் நன்மைபயக்கும்.

https://www.facebook.com/100002195571900

Follow us on Social Media